Saturday, August 22, 2015

இன்னும் சில நாட்கள்.....

நெஞ்சை உருக்கிய கதை.
தலைப்பு:-
"""""""""""""""
இன்னும் சில நாட்கள்.....
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
என்ன ஆயிற்று எனக்கு?
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?
என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள்."நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......
இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.
ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

Sunday, June 21, 2015

அம்மாவிற்காக .....


அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் 


‪#‎ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய்.
‪#‎இரண்டு‬ வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய்.
‪#‎மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய்.
‪#‎நான்கு‬ வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய்.
‪#‎ஐந்து‬ வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய்.
‪#‎ஆறு‬ வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய்.
‪#‎ஏழு வயதில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய்.
‪#‎பத்து‬ வயதில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய்.
‪#‎பதினொன்று‬ வயதில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய்.
‪#‎பன்னிரண்டு‬ வயதில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய்.
‪#‎பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய்.
‪#‎பதினான்கு‬ வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய்.
‪#‎பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய்.
‪#‎பதினாறு‬ வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய்.
‪#‎பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய்.
‪#‎பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய்.
‪#‎பத்தொன்பது‬ வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய்.
‪#‎இருபது‬ வயதாகையில் ‘ நீ யாரையாவது விரும்புகிறாயா ‘ என்னும் அவளுடைய கேள்விக்கு, ‘இதிலெல்லாம் தலையிடாதே’ என்று பதில் சொன்னாய்.
‪#‎இருபத்து‬ ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய்.
#இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய்.
#இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து ‘நல்லாவே இல்லை’ என்று நண்பர்களிடம் சொன்னாய்.
#இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய்.
#இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய்.
‪#‎முப்பது‬ வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ‘ அதெல்லாம் அந்தக் காலம்…’ என்று பதில் சொன்னாய்.
‪#‎நாற்பது‬ வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய்.
#‎நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய்.
‪#‎ஐம்பது‬ வயதாகையில் அவள் நோய்வாய்ப் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய்.
ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் !
அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை.
சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன.
காட்டாத அன்பு மலையாய் கனக்கும்.
வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள்

Saturday, May 2, 2015

அக்காக்கள் இல்லாத வீடுகள் அழகாய் இருப்பதில்லை-

அக்காக்கள் இல்லாத வீடுகள்
அழகாய் இருப்பதில்லை-

அக்கா தரும் தேநீரும்
அம்மா தரும் தேநீரும்
ஒன்று போலவே இருக்கும் என்று
என் சிநேகிதன் அடிக்கடி சொல்வான்
உண்மைதான்
அம்மாக்கள் இல்லாத வீடுகளைப் போல
அக்காக்கள் இல்லாத வீடுகளும்
அழகாய் இருப்பதில்லை

அக்காக்கள் எல்லோரும்
அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்

அக்காக்கள் இருக்கும் தம்பிகள்
ரகசியங்களை வேறு யாருடனும்
பகிர்ந்து கொள்வதில்லை
தம்பிகளின் முதல் பெண் தோழிகளாக
அக்காக்களே இருக்கிறார்கள்
சிறு வயதில்
அம்மாவின் முந்தானையில்
முகம் துடைத்துக் கொள்ளும்
தம்பிகள் பதின் பருவங்களில்
முகம் துடைக்க
அக்காவின் துப்பட்டாக்களையே
தேடுகின்றார்கள்
அக்காக்களின் மடிகளிலேயே
தலை வைத்து உறங்குகிறார்கள்
அதைத்தான் அக்காக்களும்
விரும்புகின்றார்கள்
அம்மாக்களுக்கு அடுத்ததாய்
தம்பிகளுக்கு கிடைக்கும்
அன்பான உலகம் அக்காக்கள்தான்
அக்காக்களை அம்மாவை போல்
நினைத்துக் கொள்ளும் தம்பிகளுக்கு ஏனோ..?
அம்மாக்களை அக்காக்களாய்
நினைக்க முடிவதில்லை
தம்பிகளுடனான செல்ல சண்டைகளை
அக்காக்கள் விரும்புகின்றார்கள்
தம்பிகள் கோபப்படும் போது
தலை தடவி புன்னகைக்கிறார்கள்
அக்காக்களை தவிர தம்பிகள்
வேறு யாருடனும்
உரிமையோடு சண்டை இடுவதில்லை
கணவனைத் தவிர
அக்கக்கள் அன்போடு முத்தமிடுவது
தம்பிகளை மட்டும்தான்
தம்பிகள் தன் காதலி பற்றி
முதலில் சொல்வது அக்காக்களிடம்தான்
அப்பாக்கள் தம்பிகளை திட்டும் போதல்லாம்
அக்காக்களே பரிந்து பேசுகின்றார்கள்
சாக்லேட்டோ
கொய்யாக் கனிகளோ
பாதி கடித்த பின்
தம்பிளுக்கு என்று பத்திரப்படுத்துவது
அக்காக்கள் மட்டும்தான்
தம்பிகளுக்கு கொடுப்பதற்கென்றே
அக்காக்கள் ரகசியமாக
பணம் சேமிக்கிறார்கள்
அம்மாக்கு வாங்கி தரும் சேலைகளை போலதான்
அக்காக்களுக்கு தம்பிகள் வாங்கித்தரும்
மலிவான சுடிதார்களும்
உயர்வானவைதான்
திரு மணம் முடித்த பின்
அக்காக்கள் கணவனுக்காக
வாழ பழகிக் கொள்கிறார்கள்
அதன் பின் தம்பிகள் மீதான
அன்பை வெளிப்படையாக
காட்ட முடிவதில்லை அவர்களால்.....
(படித்ததில் பிடித்தது)