Sunday, August 11, 2013

பூக்கள் இடம் மாறினால் புத்தம் புது மாலை உருவாகும்!

ஒரு சொல் கேளீர்!

* ஒவ்வொருவருக்குள்ளும்
வாழ்வின் வசந்தம்
அவரவரின்
வாய் வார்த்தைகளில்
உதயமாகிறது!


* வார்த்தைகள்
சிக்கலாகும் போது...
வாழ்க்கையும்
சிக்கலாகிறது!

* பூக்கள் இடம் மாறினால்
புத்தம் புது மாலை
உருவாகும்!


* நாட்கள் இடம் மாறினால்
புதிய வரலாறாய் உருமாறும்!

* வார்த்தைகள் இடம் மாறினால்
வாழ்வோ தட்டுத் தடுமாறும்!

* சொற்களுக்குள்
எத்தனை சூட்சுமங்கள்...

* வெளிப்படும் விதம்
வெளிப்படுத்தும் விதம்
இவை
வாழ்வின் ஆதார சுருதிகள்!

* சொற்களை
சிக்கனப்படுத்துபவர்களுக்கு
காலம் கனியாகிறது!

* சொற்களை
சில்லரை காசுகளாய்
சிதற விடுபவர்களுக்கு
கனிந்த வாழ்வும்
காயாகி விடுகிறது!

* கனிவான சொற்கள்
கவிஞரின் கைகளில்
கவிதையாய் மலர்கிறது!

* பணிந்த சொற்கள்
படைப்பாளர்களின் சிந்தனையில்
பண்புமிக்க இலக்கியமாய்
பிரசவிக்கப்படுகிறது!

* காய்ந்த சொற்கள்
எல்லாரின்
கஷ்டங்களை மட்டுமே
நிரந்தரமாய் சுமக்கிறது!

* எவரின் உள்ளத்தையும்
புண்படுத்தாத
உள்ளார்ந்த சொற்களே
ஒவ்வொருவரையும்
உத்தமனாக்குகிறது!

* வார்த்தைகளை
அள்ளிக் கொட்டியவர்கள்
வாழ்வை
அடக்கம் செய்கின்றனர்!

* ஆக...
ஒரு சொல் கேளீர்
நற்சொல் சொல்வீர்
என்றும்
நலமுடன் வாழ்வீர்!

—எஸ்.பி.செல்வராஜ், அல்லிநகரம்.